Tuesday 9 September 2014

நூற்றாண்டு நினைவு: காலத்தை வென்ற கலைஞன் டி.எஸ்.பாலையா - ஸ்பெஷல் ஸ்டோரி!




இயக்குனர் மற்றும் காமெடி நடிகர் ஒருவர், ஸ்ரீதர் இயக்கிய, காதலிக்க நேரமில்லை படத்தை ரீமேக் செய்ய விரும்பினார். அதற்கான உரிமத்தை வாங்க அப்போது நோய்வாய்பட்டிருந்த
ஸ்ரீதரை சென்று சந்தித்தார். அப்போது ஸ்ரீதர் "ஹீரோவாக யாரை போடுகிறாய்" என்று கேட்டார்.
முத்துராமன், ரவிச்சந்திரன் கேரக்டருக்கு இரண்டு இளம் ஹீரோக்களின் பெயரை சொல்லியிருக்கிறார். "நான் கேக்குறது ஹீரோவா யாரை போடப்பேறேன்னு" என்று திருப்பி கேட்டிருக்கிறார் ஸ்ரீதர்.
அவருக்கு ஒன்றும் புரியவில்லை. முத்துராமனும், ரவிச்சந்திரனும் தானே ஹீரோக்கள் என்றார்.
"அடேய்... மடையா படத்தோட டைட்டில் கார்டை பார்த்தியா அதுல டி.எஸ்.பாலையா பேர்தான் முதல்ல
வரும். அவர்தான் படத்தோட ஹீரோ. அவர் அளவுக்கு நடிக்கிறதுக்கு ஆளைக் கொண்டுவா ரீமேக்
ரைட்ஸ் தருகிறேன்" என்றாராம். இன்று வரை அந்த இயக்குநர் கம் நடிகரால் பாலையாவின்
இடத்தை நிரப்பும் நடிகரை கண்டுபிடிக்க முடியவில்லை. இப்போது இல்லை எப்போதுமே கண்டுபிடிக்க முடியாது. காரணம் அவர் காலத்தை வென்ற மகத்தான குணசித்திர கலைஞர்.

அவரது நூற்றாண்டு விழா தொடங்கியிருக்கிறது. அரசு கொண்டாடுமா?

அல்லது சினிமா கொண்டாடுமா என்று தெரியாது. 

ஆனால் அந்த மகத்தான கலைஞனை மக்களுக்கு நினைவூட்டும் தார்மீக கடமை தினமலர் இணையதளத்திற்கு இருக்கிறது...
சர்க்கஸ் கலைஞனாக... தற்போதைய தூத்துக்குடி மாவட்டம், சுண்டங்கோட்டை என்ற சிறிய கிராமத்தில் பிறந்தவர் பாலையா. சின்ன வயதிலேயே கைதட்டலுக்கும், பாராட்டுக்கும் ஏங்கியவர். அதில் ஒரு மயக்கத்தை கண்டவர். எதையாவது செய்து மற்றவர்களின் பாராட்டை பெறுவதில் அவருக்கு ஒரு மயக்கம் இருந்தது. கோவில் குளத்தில் மணிக்கணக்கில் நீச்சல் அடிப்பார். ஆற்றை இக்கரையிலிருந்து அக்கறைக்கு நீந்தி கடப்பார்.
முரட்டு காளைகளை அடக்குவார். எல்லாமே மற்றவர்களின் கைதட்டலுக்காக.
அப்போது தூத்துக்குடியில் ஒரு சர்க்கஸ் கம்பெனி முகாமிட்டிருந்தது. அதை பார்க்கப் போனார் பாலையா. அதில் சர்க்கஸ் கலைஞர்கள் வித்தை காட்டி முடித்ததும் எல்லோரும்
கைதட்டுவதை பார்த்தார். நாமும் சர்க்கஸ் கம்பெனியில் சேர்ந்து வித்தை செய்தால் மக்கள்
கைதட்டுவார்கள் என்று நினைத்தார். அந்த கம்பெனியில் வேலை கேட்டார் ஆனால் பாலையாவின்
தோற்றத்தை பார்த்து கிண்டல் செய்தவர்கள் வேலை கொடுக்க மறுத்துவிட்டார்கள். மதுரையில்
ஒரு சர்க்கஸ் கம்பெனி இருக்கிறது அதில் சேர்த்துக் கொள்வார்கள் என்று நம்பி வீட்டில் சொல்லிக்
கொள்ளாமல் திருட்டு ரயிலேறி மதுரைக்கு வந்தார். நாடக கலைஞர்
அவர் தேடி வந்த சர்க்கஸ் கம்பெனி அங்கு இல்லை. 

அன்றிரவு மதுரை பிளாட்பாரத்தில் படுத்து தூங்கியவர். வயிற்று பிழைப்புக்காக கசாப்பு கடையில் வேலை செய்தார். அப்போது மதுரையில் நிறைய நாடக கம்பெனிகள் செயல்பட்டு வந்தது. தினமும் நாடகம் பார்க்க
சென்று விடுவார். நாடகத்திற்கும் மக்கள் கைதட்டுவதை பார்த்து நாடக கம்பெனியில் சேர்ந்து விட
முடிவு செய்தார். அப்போது மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் இருந்து விலகிய சிலர் இணைந்து பாலமோஹன சபா என்ற ஒரு நாடக கம்பெனியை ஆரம்பித்தனர்.
அவர்களோடு இணைந்து கொண்டார் பாலையா. அவருக்கு கந்தசாமி முதலியார் என்ற
குரு நடிப்பு சொல்லிக் கொடுத்தார். தனது 15வது வயதில் நாடக மேடை ஏறினார் பாலையா.
சினிமா நடிகர் வெள்ளைக்கார இயக்குனர் எல்லீஸ் ஆர்.டங்கன் சதிலீலாவதி என்ற திரைப்படத்தை இயக்கினார். 
அந்தப் படத்திற்கு வசனம் எழுதியவர் பாலையாவின் நடிப்பு குருவான கந்தசாமி முதலியார். அப்போது அவரின் சிபாரிசின் பேரில் சதிலீலாவதியில் வில்லனாக அறிமுகமானார், பாலையா. அந்தப் படத்தில்தான்
எம்.ஜி.ஆரும் ஒரு சிறிய கேரக்டரில் அறிமுகமானார். அந்த படத்தில் பாலையாவின் நடிப்பு பலராலும்
பாராட்டப்பட்டது. அப்போது சூப்பர் ஸ்டார்களாக இருந்த தியாகராஜ பாகவதர்,
பி.யூ.சின்னப்பா ஆகியோரின் படங்களில் வில்லனாக நடிக்க ஆரம்பித்தார். ஆரியமாலா,
ஜகதலபிரதாபன் படங்கள் பாலையாவை உயர்த்திப் பிடித்தன.

ஹீரோவானார் 1937ம் ஆண்டு தியாகராஜ பாகவதருடன் பாலையா நடித்த அம்பிகாபதி படத்தில், பாகவதரும்
பாலையாவும் போட்ட வாள் சண்டை மிகவும் பிரபலம். அந்த சண்டை காட்சிக்காகவே மக்கள் திரும்ப
திரும்ப படத்தை பார்த்தார்கள். அதேபோல எம்.ஜி.ஆர். ஹீரோவாக அறிமுகமான
ராஜகுமாரி படத்திலும் பாலையாதான் வில்லன். எம்.ஜி.ஆருடன் அவர் போட்ட வாள்
சண்டையை இப்போது பார்த்தாலும் பிரமிப்பாக இருக்கும். 

மார்டன் தியேட்டர்ஸ் நிறுவனம் உலகப்போரை மையமாக வைத்து சித்ரா என்ற படத்தை தயாரித்தது. அதில் பாலையா ஹீரோவாக நடித்தார். நடனம் மட்டுமே ஆடிக்கொண்டிருந்த ராகிணி பத்மினி சகோதரிகள் மலையாளத்தில் பிரசன்ன என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார்கள். அந்தப் படத்தில் ஹீரோவாக நடித்தவர் பாலையா.
அதன் பிறகு ஹீரோவாக நடிக்கவில்லை. வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களிலேயே நடித்தார்.
தனிமுத்திரை தனக்கென்று தனி மாடுலேஷன், டயலாக் டெலிவரி, மேனரிசம் ஆகியவற்றை அமைத்துக் கொண்டார்.
வில்லனாக நடித்தாலும் சரி, காமெடியனாக நடித்தாலும் சரி, குணச்சித்திர கேரக்டர்களில் நடித்தாலும் சரி அலட்டிக் கொள்ளாமல் நடிப்பார். அவர் வரும் காட்சிகளில் எம்.ஜி.ஆர், சிவாஜி உடன்
நடித்தாலும் அவர்தான் தூக்கலாக தெரிவார். அதுதான் அவருடைய ஸ்பெஷாலிட்டி.
1949ம் ஆண்டு வெளிவந்த வேலைக்காரி படத்தில் பாலையா நடித்த பகுத்தறிவாளன் கதாபாத்திரம் தான்
பின்னாளில் எம்.ஜி.ஆர், சிவாஜி முதல் இன்றைக்கு வருகிற சிவகார்த்திகேயன் வரைக்கும் நடிக்கும்
ஹீரோயிச கதாபாத்திரங்களுக்கு முன்னோடி. பஞ்ச் டயலாக்கெல்லாம்
அப்பவே பாலையா பேசிவிட்டார். செந்தமிழ் பேசி நடித்துக் கொண்டிருந்த சினிமாவில், யதார்த்த தமிழை கொண்டு வந்தவர் பாலையா. சரித்திர படமாக இருந்தாலும் அவரது தமிழ் நடைமுறைத்
தமிழாகத்தான் இருக்கும்.
மதுரை வீரன் படத்தில் எம்.ஜி.ஆரை எதிர்க்க துணிவில்லாத தளபதி கேரக்டரில் நடித்திருந்த
பாலையா "எப்பா இன்னிக்கு வெள்ளிக்கிழமை கத்திய கையால தொடக்கூடாதப்பா..."
என்று சமாளிப்பார். எதிரிகளை கோட்டைவிட்டுவிட்டு "மன்னா நாங்கள் பின் தொடர்ந்து சென்றோம்
அவர்கள் முன் தொடர்ந்து சென்று விட்டார்கள்" என்ற வசனம் காலத்தை கடந்தும் மக்களை சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் கதை சொல்லும்போது அதை பலவித முகபாவங்களுடன்
கேட்கும் அந்த நகைச்சுவை காட்சியை அடித்துக் கொள்ள இதுவரை எந்தப் படத்திலும்
காமெடி காட்சி வரவில்லை.
பாகப்பிரிவினை படத்தில் தன் தம்பி எஸ்.வி.சுப்பையாவிடம் கண்ணீர் மல்க அவர் பேசும்
காட்சி இப்போது பார்த்தாலும் கல் நெஞ்சையும் கலங்க வைக்கும். திருவிளையாடல் படத்தில் வித்யா கர்வமிக்க பாடகராக வந்து,"பாண்டிய நாட்டில்
ஒரு விறகு வெட்டியின் பாட்டுக்கு இந்த ஹேமநாதன் அடிமையப்பா" என்று கலங்கி நிற்கும்
காட்சியை இன்னொருவரால் செய்யவே முடியாது.
தில்லானா மோகனாம்பாள் படத்தில் அவர் தவில் வாசிக்கும் பாணி உண்மையான தவில்
வித்வான்களையே கிரங்க வைத்தது. சண்முகசுந்தரத்தை (சிவாஜி) பாதுகாக்க அவர் காட்டும்
அக்கறை நட்புக்கு அடையாளம். மோகனாம்பாளை சந்திக்க திருட்டுத் தனமாக செல்லும் சண்முகசுந்தரத்துக்கு பாதுகாப்பு வேண்டுமே என்று கருதி "தம்பி எனக்கு அங்க ஒரு சோடாக்
கடைக்காரனை தெரியும் நானும் வர்றேன்" என்று கூடவே கிளம்புகிற காட்சி இன்றைய
நட்பு காட்சிகளுக்கு முன்னோடி. இப்படி பாலையாவின் தனித்தன்மை வாய்ந்த கேரக்டர்கள்
பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.
வெல்ல முடியாத கலைஞன்
ஒரு படத்தில் எம்.ஜி.ஆர் நடிக்க வேண்டிய கேரக்டருக்கு பாலையாவை போட்டு விட்டார்கள். அன்று எம்.ஜி.ஆருக்கு பாலையா மீது கோபம். ஆனால் பின்னாளில் எம்.ஜி.ஆர்., நான் ஏன் பிறந்தேன்
சுயசரிதையில் "அன்று பாலையா நடித்த கேரக்டரில் நான் நடித்திருந்தால் அந்த படம் தோற்றிருக்கும்"
என்று எழுதினார். தமிழ் சினிமாவில் பல ஹீரோக்களை அறிமுகப்படுத்திய ஆங்கிலேய இயக்குனர்
எல்லீஸ் ஆர்.டங்கன் சொன்னார் "நோ ஒன் கேன் ரீபிளேஸ் பாலையா" என்று. அவர் சொன்னது 100
ஆண்டுகளை கடந்தும் அப்படியே இருக்கிறது.

SOURCE

DINAMALAR

0 comments:

Post a Comment